Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
279
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 11

பைக் கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்டவன், கார், பைக், சைக்கில் என்று அனைத்து மாடல் புது ஸ்போர்ட்ஸ் வாகனங்களையும் தயாரிக்கும் தொழிற்சாலை தான் ஆத்வி தொடங்கி இருப்பது. பெரிய பெரிய தொழிலதிபர்கள் முன்னிலையில், ஆத்வியின் கம்பனியை ஆதி திறந்து வைக்க தயாராக இருந்த வேலையில், யாதவ் வரவும் ஆத்வியின் முகத்தில் இருந்த கனிவு மறைந்து போனது.

அதுவும் மித்ரா அவனை கொஞ்சுவதை பார்த்த பிறகு அவன் மனம் பொறாமையில் வெந்து போனது. இது இன்று நேற்று வந்த பொறாமை அல்ல, ஆத்விக்கு விபரம் தெரிந்து யாதவ் அவன் வீட்டிற்கு வந்த நாட்களில் இருந்தே தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.

போதாக்குறைக்கு ஆதி வேறு அவன் தோளில் கைப் போட்டு, "எப்டி இருக்க யாதவ்" என்று தோள் தட்டிக் கொடுப்பதை பார்த்து காண்டானவன்,

"டாட் டைம் ஆச்சி இப்ப பங்க்ஷன் ஸ்டார்ட் பண்ண போறீங்களா இல்லையா" கடுகடுவென பொறிய. அவன் முகத்தை வைத்தே கடுவன் ஏன் கோபமாக இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டவனுக்கு மெல்லிய புன்னகை அரும்பியது.

"யா..ஆத்வி வா" என்றவன் "மித்து கம்" என கை நீட்டி மனைவியை அழைக்க,

"நானா.." நான் எதுக்கு மித்ரா புரியாமல் விழிக்கவும்,

"பெரியம்மா உங்களோட சேந்து பெரியப்பா ரிப்பன் கட் பண்ண கூப்பிட்றாரு, சரிதானே பெரியப்பா" சிரித்துக் கொண்டே கேட்ட யதாவை வெறியாக ஆத்வி முறைக்க,

"சரிதான் யாதவ்" என்ற ஆதி மித்ராவைப் பார்க்க, அவளும் பூரிப்போடு கணவன் பக்கத்தில் நின்று, இருவருமாக சேர்த்து மகிழ்ச்சி பொங்க தன் மகனின் வளர்ச்சி மென்மேலும் வளர வேண்டிக் கொண்டு, கை தட்டல்கள் தூள் கிளப்ப ரிப்பன் வெட்டி கம்பனியை திறந்து வைத்தனர்.

** ** **

கடற்கரையில் அமர்ந்து கடலில் விளையாடும் அனைவரையும் புன் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்த கவி, கடலில் இறங்கி நின்று ரிங் பால், கால் பந்து, நீச்சல் விளையாட்டுகளை எல்லாம் அதிசயம் போல முட்டைக் கண்களை விரித்து கண்டுக்களித்தாள்.

சிறு பிள்ளைகள் எல்லாம் ஒன்றுகூடி மணல் வீடு கட்டுவதும் அது சரியாக வராமல் சரிவதுமாக இருக்க,
"ஐயோ ஷட் இந்த முறையும் போச்சி" கோரஸாக கத்துவது கேட்கவே, அவர்கள் புறம் பார்வையை பதித்து சிறிது நேரம் அவர்கள் செய்வதை கண்கள் சுருக்கி பார்த்தவளாக, பின்னால் இருந்த மண்ணை தட்டி விட்டுக்கொண்டு அவர்களிடம் வந்த கவி,

"ஹாய் கியூட்டி பைஸ் எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க" சிரித்த முகத்தோடு கொஞ்சலாக வினவியவளைக் கண்டு சிறு வாண்டுகளுக்கு என்ன தோன்றியதோ! தன் குறைகளை எல்லாம் கொட்ட தொடங்கி விட்டனர்.

"அக்கா, நாங்க ரொம்ப நேரமா ஒரு பெரிய வீடு கட்டிட்டு இருக்கோம் ஆனா அது பாதிலே சரிஞ்சி போகுது" சோகமாக சொல்லவும் அச்சோ என பரிதாபப்பட்டவள்,

"அதனால என்ன குட்டிஸ் நான் உங்களுக்கு கட்டி தரவா" என்று ஆர்வமாக கேட்கவும், பிள்ளைகளும் ம்ம்.. என்று உற்சாகமாக தலையாட்டி அவளுக்கு இடம் கொடுத்து நகர்ந்து அமர்ந்துகொண்டனர்.

அவள் மண் வீடு கட்டக் கட்ட அதில் பள்ளம் பறித்து நீர் சுரக்க செய்து, மேல் கோபுரங்களில் நான்கு ஓட்டைகள் போட்டு உள்ளே வெளிச்சம் பரவ, நான்கு வாண்டுகள் அதனுள் கைகள் விட்டு ஹெலோ குலுக்கி விளையாட, அதை கண்டு சிரித்தவள் "அழகா இருக்கா குட்டிஸ்" என்றாள் மணல் வீடு கட்டி முடித்ததை பார்த்தபடி.

"ம்ம்.. சூப்பர் க்கா.." என்று வாண்டுகள் மகிழ,

"இப்ப இதுக்கு அழகு சேர்க்க ஏதாவது பூ வச்சா நல்லா இருக்கும்" இவள் சொல்லும் போதே, இருவரின் அலறல் சத்தம் அங்கு நிலவிய அழகான நிசப்தத்தை கலைத்தது.

கடலில் நின்று செல்ஃபீ வீடியோ எடுப்பதில் முனைப்பாக இருந்த பெற்றோர், தங்கள் மூன்று வயது குழந்தையை கவனிக்காமல் விட்டதன் விளைவு, குழந்தை தவறுதலாக கடல் அலையோடு அடித்து சென்ற பிறகு தான்,

"ஐயோ.. என் குழந்தை அலைல அடிச்சிட்டு போதே" என பெருத்த அலறலோடு கத்திக் கூப்பாடு போட தொடங்கினர்.

வெயில் கொளுத்தும் மதிய வேலையில், காலையில் இருந்த அளவுக்கு மக்கள் கூட்டம் இல்லாமல் போகவே, அந்த குழந்தையை காப்பாற்ற முடியாமல் கண்ணீர் விட்டு கதறிய பெற்றோரின் சத்தம் கேட்டு வேகமாக அவ்விடம் ஓடி வந்த கவி, எதைப் பற்றியும் யோசிக்காமல் தனக்கு நீச்சல் தெரியாது என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், குழந்தையை தேடுகிறேன் என்ற பெயரில் வீரசாகசம் செய்து, கடலில் இறங்கி நீச்சல் தெரியாமல் அலையில் அடித்து சென்றவளை பார்த்து, "அக்கா.. அக்கா.." என்று அவளோடு விளையாடிய குழந்தைகள் எல்லாம் அழத் தொடங்கி விட்டது.

தனக்கு வேலை கிடைத்த விடயத்தை முதலில் கவிக்கு அழைத்து சொல்லலாம் என நினைத்து, பின் நேரில் சென்று அவளிடம் சொல்லி இருவருமாக சேர்ந்து மகிழ்ச்சியை கொண்டாடுவோம் என்ற எண்ணத்தில் ஆசை ஆசையாக ஓடி வந்த ஸ்வாதி, வரும் வழியில் ஒரு குட்டி பிள்ளையார் கோவிலைக் கண்டதும் அங்கு சென்று பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி,
'தனக்கும் தன் தோழிக்கும் நல்ல எதிர்காலத்தை காட்டு பிள்ளையாரப்பா' என மனமுருகி வேண்டிக்கொண்டாள்.

ஐயர் கொடுத்த திருநீற்றை நெற்றியில் வைத்து கவிக்கும் காகிதத்தில் மடித்து வைத்துக் கொண்டவளாக, சிறிது நேரம் வரை அங்கேயே அமைதியாக அமர்ந்திருந்தவள் பின் கவி தனியாக இருப்பாளே என்று அவசர அவசரமா கடற்கரைக்கு ஓடி வந்த ஸ்வாதி, அங்கிருந்த சிலர் மட்டும் கூட்டம் கூடி இருப்பதை பார்த்து, சுற்றி முற்றி கவியை தேடி கண்களை சுழல விட்டபடி, மனம் துடிக்க கூட்டத்தை விளக்கிக் கொண்டு வந்தவளுக்கு அப்பட்டமான பயம் தொற்றிக் கொண்டது.

எங்கும் கவியை காணாமல் பதட்டமாக அக்கம் பக்கம் விசாரித்ததில், "குழந்தையை காப்பாற்ற சிவப்பு நிற சுடிதார் போட்டிருந்த ஒரு இளம்பெண் கடலில் குதித்து விட்டாள்" என்று கேட்டதும் பெரிதாக அதிர்ந்து பயந்து போனாள்.

"ஐயோ கவி.. ஏன் டி நீச்சல் தெரியாம கடல்ல குதிச்ச.. இப்ப உன்ன நான் எப்டி காப்பாத்துவேன்"

தலையில் அடித்துக்கொண்டு அழுத ஸ்வாதிக்கு, அவர்கள் சிவப்பு உடை என்று சொன்னதை வைத்தே, அது கவி தான் என்று நன்றாக தெரிந்ததும், பொங்கி வரும் அலையில் கைகளை மட்டும் தண்ணீருக்கு மேல் தூக்கி, நீரில் மூழ்கி மூழ்கி தத்தலித்துக் கொண்டிருந்தவளை கண்டு, நெஞ்சில் அடித்து கதறினாள்.

"வேலை கிடைச்ச விஷயத்தை ஆசை ஆசையா உன்கிட்ட சொல்ல ஓடி வந்தேனே டி அதுக்குள்ள இப்டி பண்ணிட்டியே.. யாராவது காப்பாத்துங்களேன்" என்று மண்டியிட்டு மடங்கி அவள் அழுதுக் கொண்டிருக்க,

அதற்குள் அங்கு ஓடி வந்த மீன் பிடி தொழிலாளி ஒருவர் கடலில் இறங்கி, அலையோடு அலையாக அடித்து சென்ற குழந்தையை முதலில் தூக்கி வந்தார்.

தண்ணீரை முழுதாக குடித்து மயங்கிய நிலையில் குழந்தை கிடைப்பதை கண்டு முதலுதவி செய்துக் கொண்டிருக்கும் போதே, வேறு யாரோ ஒருவர் கடலில் இறங்கி ஓட, அனைவரின் மனமும் பரிதவித்து போனது.

ஒருநிலைக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் வயிற்றில் நீர் நிரம்பி மயங்கி போய் கடலுக்கடியில் மூழ்கிக் கொண்டிருந்த கவியை காப்பாற்றி, தனது தோளில் போட்டு தூக்கி வந்தான் யாதவ்.

குழந்தையை பெற்றவர்கள் அழுதுக் கொண்டே குழந்தையை சூழ்ந்துக் கொள்ள, யாதவ் கவியை தூக்கி வருவதை பார்த்ததும், அவளோடு விளையாடிய சிறுவர்களும் ஸ்வாதியும், அலறலோடு யதாவ் அருகில் ஓடினர்.

ஸ்வாதி இருக்கும் மனநிலையில் யதாவை கவனிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை அப்போது.

கவியை கரையில் கிடத்தி, வயிற்றில் இருக்கும் நீரை எடுக்கும் நோக்கில் யாதவ் அவள் வயிற்றை அமுக்கிக் கொண்டு இருக்க,

"கவி.. கவி.. கண்ண தொறந்து என்ன பாரு டி.. நீ இல்லாம நான் எப்டி இருப்பேன், செத்தாலும் நீயும் நானும் ஒன்னாவே செத்து போவோம், கண்ண தொறக்க மாட்டியா கவி..

அய்யோ.. அய்யோ.. அய்யோ நான் பண்ணுவேன் கடவுளே.. ஏய் கவிஇஇ.." கத்திப் புலம்பி கவியை உளுக்கி எடுத்து, தன்னையும் முதலுதவி செய்ய விடாமல் அக்கப்போர் செய்துக் கொண்டிருந்தவளை, ஓரளவுக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல்,

"ஏய்ய்.. அட ச்சீ..நிறுத்து" யாதவின் ஓங்கி ஒலித்த குரலில் வாயில் கை வைத்து மிரண்டு போய் அவனை பாவமாக பார்த்த ஸ்வாதி,

"என் க்.கவி.." என குரல் நடுங்க கை நீட்டி வெம்பலாக துடித்தவளை,

"ஷூ.. சத்தம் வரக் கூடாது வாய மூடு" வாய் மேல் கை வைத்து ஸ்ட்ரிக்ட் வாத்தியாக அவன் மிரட்டியதில், சட்டென இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு ஸ்வாதி தேம்ப,

"ப்பாஆஆ.. ஆழாக்கு சைஸ்ல இருந்துட்டு என்னா சவுண்டு போடுறா" அவளை முறைத்தபடியே சலித்த யாதவ், கவியின் வயிற்றில் இருந்த மொத்த தண்ணீரைம் வெளியே எடுத்து கை கால்களை சூடு பறக்க தேய்க்கவும், பெரிதாக இரும்பியபடி கண் விழித்தவளை,

"கவிஇ.." என பாய்ந்து சென்று கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள் ஸ்வாதி.

கடலோடு கண் கண்ணாடி மட்டும் அடித்து சென்று விட, காதில் மாட்டி இருந்த ஹியரிங் மெஷினை மேல் சட்டையோடு பின் குத்தி வைத்திருந்ததால், காதை விட்டு மட்டும் நழுவி அவள் கழுத்தில் தொங்கியது. அதனால் ஸ்வாதி அழுவது கத்துவது எதுவும் காதில் விழாமல்,

"ஸ்வாதி அந்த பையன காப்பாத்தியாச்சா, எங்கே அந்த குழந்தை அவனுக்கு ஒன்னும் ஆகலையே.." படபடப்பாக பொரிந்த கவியை கண்டு சற்று விலகிய ஸ்வாதி, கழண்டு தொங்கிய ஹியர் பாட்ஸை அவள் காதுகலில் மாட்டி விட்டவளாக,

"அதெல்லாம் அவன் பிழைச்சிட்டான் ஆனா நீ தான் கொஞ்சம் விட்டுருந்தா செத்துருப்ப.. ஏன் டி உனக்கு அறிவில்ல உனக்கு தான் நீச்சல் தெரியாதே, அப்புறம் எதுக்கு பெரிய இவ மாதிரி கடல்ல இறங்கின.. நான் என்ன சொல்லிட்டு போனேன் கவி உன்கிட்ட..

இன்டெர்வியூ முடிச்சிட்டு வர வரைக்கும் ஒரு இடமா உக்காந்து இருக்கணும்னு சொன்னேனா இல்லையா.." மூச்சி வாங்க கோவமாக கத்திய ஸ்வாதியை பாவமாக கண்ட கவி,

"சாரி டி, திடீர்னு குழந்தை கடல்ல அடிச்சிட்டு போயிடுச்சின்னு கத்தினதும், அந்த குழந்தைய எப்படியாவது காப்பாத்தணும்னு நினைச்சு, யோசிக்காம தண்ணில இறங்கிட்டேன்.. ஆனா அது இவ்ளோ பெரிய விபத்தா முடியும்னு நான் நினைச்சி பாக்கல ஸ்வாதி.."

"அதுக்காக உன் உயிரை பணயம் வைப்பியா கவி.. சரி உன்ன பத்தி தான் நீ யோசிக்கல, என்னைய கூடவா கவி யோசிக்க மறந்த.. நீ இல்லனா நான் இல்லைனு உனக்கு தெரியாதா கவி" கண்ணீரோடு வேதனையாக கேட்டிட,

"அப்டிலாம் இல்ல ஸ்வாதி, சின்ன குழந்தைக்கு உயிருக்கு போராடினத பாத்ததும், பதட்டத்துல முட்டாள் மாதிரி செஞ்சிடேன்.. என்ன மன்னிச்சுடு ஸ்வாதி" என்று தவறை உணர்ந்து அழுதவளின் கண்ணீரை துடைத்து விட்டவளாக,

"சரி அழாதே கவி, நல்ல வேலை உனக்கு ஒன்னும் ஆகல.. எல்லாம் அந்த விநாயக பெருமாள் தான் உன்ன காப்பாத்தி இருக்கார்.." என்றதும் அதுவரை ஓரமாக ஒதுங்கி நின்று இவர்களின் பாசப்போராட்டத்தை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த யாதவ்க்கு, ஆல் கிரெடிட்ஸ்ஸையும் விநாயகருக்கு தூக்கிக் கொடுத்ததும் புசுபுசுவென கோவம் வந்து விட்டது.

"ஹெலோ இப்ப என்ன சொன்ன.. உயிரைக் கொடுத்து கடல்ல இறங்கி இவங்க உயிரக் காப்பாத்தினது நானு, நீ என்னவோ விநாயகர் வந்து இந்த பொண்ண காப்பாத்தினார்னு வாய்க்கு ஈஸியா சொல்ற" மூக்கு விடைக்க ஸ்வாதியிடம் எகிறிக் கொண்டு முறைக்கவும் தான், அவனை அடையாளம் கண்டாள் ஸ்வாதி.

ஈர உடையில் தொப்பளாக நனைந்து ஆளே பார்க்க வேறு மாதிரி இருக்கவும் அவன் தான் அவளின் கம்பனி எம்டி யாதவ் என்று முதலில் இருந்த பதட்டத்தில் கண்டுக் கொள்ளாதவள், இப்போது அவன் தான் என தெரிந்ததும்,

"சாரி சார், நான் இருந்த டென்ஷன்ல உங்களை மறந்துட்டேன்.. ரொம்ப நன்றி சார், நீங்க மட்டும் இல்லனா என் கவியோட நிலைமை இந்நேரம் என்ன ஆகி இருக்கும்னு நினைச்சி கூட பாக்க முடியல.. ரொம்ப தாங்க்ஸ்" என புன்னகை முகமாக சொல்ல, அவன் பார்வையோ குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த கவியிடம் தான் ஆர்வமாக இருந்தது.

ஆத்வியின் கம்பனி திறப்பு விழா மதியம் இரண்டு மணியளவில் முடிந்த வேலையில், ஆத்வி யாதவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக "ஏன் இங்கு வந்தாய்" என்ற பார்வையை மட்டும் அவன் மீது வெறுப்பாக வீசிக் கொண்டு இருக்கவும், ஆதி மித்ரா வற்புறுத்தளின் படி அந்த விழாவில் கலந்துக் கொண்ட யாதவ்,

அனைவரும் சாப்பிட சென்று விடவும் அதற்கு மேலும் ஆத்வியின் முறைப்பை சகித்துக் கொள்ள முடியாமல், யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து மனஅமைதிக்காக கடற்கரைக்கு வந்தவன் தான். அங்கு ஸ்வாதி கத்திக் கதறுவதை பார்த்து, என்ன ஏதேன விசாரித்தவனாக, சட்டென கவியை காப்பாற்ற கடலில் குதித்து விட்டான்.

பின் பாதிக்கப்பட்ட குழந்தையை மூவரும் பார்க்க செல்ல, அந்த குழந்தையின் பெற்றோருக்கு அனைவரின் வசவு மழையும் பாரபட்சமின்றி கிடைத்துக் கொண்டிருக்க, தலை குனிந்து நின்றபடி, வற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு பிள்ளையை தோளில் போட்டு தட்டிக் கொண்டிருந்தனர்.

"இனிமேலாவது குழந்தைய வச்சிக்கிட்டு அஜாக்கரதையா இருக்காதீங்க ம்மா" என்ற கவியை நன்றியோடு பார்த்து கையெடுத்துக் கும்பிட, அவர்கள் கையை கீழ் இறக்கி விட்டவளாக,

"குழந்தைய பத்திரமா பாத்துக்கோங்க" என்றவளுக்கு தான் கண் தெரியவில்லை.

கண்ணாடி இல்லாமல் மங்கலான காட்சிகளை கண்டு தலை வலிக்கவே, சிறிது நேரம் தாக்குப் பிடித்தவளால் அதற்கு மேலும் முடியாமல், தலையையினை பிடித்தபடி மயங்கிய கவியை தாங்கி இருந்தான் யாதவ்.

கவிக்கு யார் ஜோடி ஆத்வியா? யாதவா?
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 11
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top